ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு அங்கீகரிக்க முடியாது

 ஒரே கல்வியாண்டில் நேரடியாக தொலைதூர கல்வி மூலம் பெற்ற 2 பட்டங்களை அங்கீகரிக்கக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் வெவ்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டதால், இது குறித்து தீர்வை காண்பதற்காக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வை தலைமை நீதிபதி அமைத்தார்.


இதனை தொடர்ந்து இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாணைக்கு வந்தது. அப்போது, நேரடியாகவும், தொலைதூரக் கல்வி மூலமாகவும் ஒரே ஆண்டில் 2 பட்டங்களை பெறுவதை தடை செய்வதற்கு எந்தவித சட்டமும் இல்லை என்றும் 2 பட்டங்களும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பெறப்படும் பட்சத்தில் இந்த பட்டங்கள் ஏற்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக மானியக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரே கல்வியாண்டில் இரட்டை பட்டப்படிப்பு மத்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை என்று தெரிவித்தார். மேலும் இரட்டைப் பட்டப்படிப்பை அனுமதிப்பது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஒரே கல்வியாண்டில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை அங்கீகரிக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தொலைதூர கல்வியாளர்களுக்கு, முறையான பயிற்சி மற்றும் அனுபவம் இருக்காது என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்

Comments