அக்டோபரில் உச்சம்...!

அக்டோபரில் உச்சம்...!


தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்பாக எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வு அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 12 நாள் ஊரடங்கு காரணமாக கொரோனா பரவல் உச்சமடைவது இருவாரங்கள் தள்ளிப்போகக் கூடும்.

அடுத்து வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் ஜூலை மாத மத்தியில் 2.75  லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இம்மாத இறுதிக்குள் 71,000 பேரும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 22,000 பேரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். ஜூலை 15ம் தேதியில் சென்னையில் 1.5 லட்சம் பேரும், தமிழகம் முழுவதும் 2,76,000 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் மற்றும் தொற்றுநோய் துறை தலைவர் சீனிவாஸ் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் அக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்று உச்சத்தை தொடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதனால், நகரின் பல்வேறு இடங்களில் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைப்பதில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் 3,500 படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா அச்சம் காரணமாக இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் முற்றிலும் குறைந்து விட்டனர். 250-க்கும் குறைவான புற நோயாளிகளே தற்போது இங்கு உள்ளனர். இதனால், மருத்துவமனையை முற்றிலும் கொரோனா மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது தவிர அம்பத்தூர் மண்டலத்தில் அத்திப்பட்டுவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான குடியிருப்பை கொரோனா சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்து. இங்கு 5,000 படுக்கைகள் தயார் செய்யப்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் 10 - ம் தேதிக்குள் இந்த சிறப்பு மையம் முற்றிலும் செயல்படத் தொடங்கும். இந்த மையத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று பார்வையிட்டார். 

கொரோனா நோயாளிகளை நான்கு பிரிவுகளாகப் பிரித்து சிகிச்சையளிக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது. அதன்படி மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ராஜீவ்காந்தி போன்ற அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவார்கள். காய்ச்சல் மட்டுமுள்ளவர்கள் கொரோனா ஹெல்த் சென்டர்களில் அனுமதிக்கப்படுவார்கள். அறிகுறிகள் குறைவாக அல்லது இல்லாதவர்கள் கொரோனா கேர் சென்டர்களிலும் மற்றவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி வீட்டிலேயே சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்..

Comments