எங்களின் வலிமை பற்றி தெரியும் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

எங்களின் வலிமை பற்றி தெரியும் அமெரிக்காவை எச்சரித்த ஈரான்


பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்களை ஈரானிய படையினர் சுற்றி வளைத்தனர்.

ஈரானின் கடற்படைக்கு சொந்தமான துப்பாக்கி ஏந்திய 11 சிறிய ரக படகுகள் அமெரிக்க கப்பல்களை சுற்றி வளைத்து வட்டமிட்டது. 


இந்நிலையில், அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்தும் துப்பாக்கி ஏந்திய ஈரான் நாட்டின் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்தி அழிக்க கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், அப்படி ஏதேனும் நடந்தால் வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என்று ஈரான் மேஜர் ஜெனரல் ஹுசைன் சலமி எச்சரித்துள்ளார்.

இது குறித்து சலமி கூறியதாவது:-

எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஏதேனும் ஊறுவிளைவித்தால், மிக மோசமாக எதிர்வினையை சந்திக்க நேரிடும்.அவர்களுக்கு எங்களின் வலிமைப் பற்றி தெரியும். முந்தைய சமயங்களில் நாங்கள் கொடுத்த பதிலடியிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என கருதுகிறோம் என்றார்.

அமெரிக்காவும் ஈரானுக்கும் இடையே 2018 முதல் மீண்டும் போர்ச் சூழல் மூண்டுவந்த நிலையில், இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஈரானின் முக்கிய போர் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஏவுகனைத் தாக்குதல் நடத்தி கொன்றது.

அதைத் தொடர்ந்து ஈரான் ராணுவம், ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவத் தளத்தில் தாக்குதல் நடத்தியது.அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். கடந்த 78 ஆண்டுகளில் அமெரிக்க ராணுவம் மீது ஈரான் நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் இதுவாகும்.

தற்போது அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கொரோனா வைரஸால் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிற நிலையில்,இவ்விருநாடுகளும் மீண்டும் போர்ச் சூழலை நோக்கி நகர்வது ஆபத்தான போக்காகப் பார்க்கப்படுகிறது.

Comments