தாராவியில் தமிழக ஜவுளி வியாபாரிகள் 2 பேர் கொரோனாவுக்கு பலி

தாராவியில் தமிழக ஜவுளி வியாபாரிகள் 2 பேர் கொரோனாவுக்கு பலி



மும்பை தாராவி மாட்டுங்கா லேபர் கேம்ப் பகுதியில் தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதிகளை சேர்ந்த 9 ஜவுளி வியாபாரிகள் வசித்து வந்தனர். இவர்கள் வீடு வீடாக சென்று சேலை மற்றும் ஜவுளிகளை விற்பனை செய்து வந்தனர்.

கொரோனா பிரச்சினை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின் 9 பேரும் அவர்கள் வசித்து வந்த சிறிய வீட்டில் முடங்கினர்.

இந்தநிலையில் கடந்த 14-ந் தேதி கோவில்பட்டி பகுதியில் உள்ள முடுக்கன்பட்டியை சேர்ந்த 62 வயது ஜவுளி வியாபாரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இருந்த டாக்டர்கள் அவருக்கு மருந்து, மாத்திரைகள் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

இந்தநிலையில் வீடு திரும்பிய அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் அதிகமாகி உள்ளது. எனவே மீண்டும் அவர் கே.இ.எம். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நடந்த சோதனையில் அவர் கொரோனாவுக்கு பலியானது தெரியவந்தது.

இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை அருப்புக்கோட்டை பந்தல்குடியை சேர்ந்த 48 வயது ஜவுளி வியாபாரியும் உயிரிழந்தார். பரிசோதனையில் அவரும் கொரோனாவுக்கு உயிரிழந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் கொரோனாவுக்கு பலியான ஜவுளி வியாபாரிகளுடன் வசித்து வந்த மற்றவர்களை மும்பை மாநகராட்சி தனிமைப்படுத்த கூட நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் சயான் கோலிவாடா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. கேப்டன் தமிழ்ச்செல்வன் தலையிட்ட பிறகு கொரோனாவுக்கு பலியான ஜவுளி வியாபாரிகளுடன் வசித்து வந்த 6 பேர் தாராவி போலீஸ் நிலையம் பின்னால் உள்ள மாநகராட்சி பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்றொருவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.

இந்தநிலையில் தனிமைப்படுத்தப்பட்ட அருப்புகோட்டையை சேர்ந்த ஜவுளி வியாபாரி ஒருவர் உருக்கமாக கூறியதாவது:- எங்களுடன் இருந்த 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துவிட்டனர். இதில் உயிரிழந்த 62 வயது நபரின் மகனும் எங்களுடன் தான் இருக்கிறார். எனவே அவர் தந்தைக்கு இறுதி சடங்கு செய்துவிட்டார். அருப்புகோட்டையை சோ்ந்த 48 வயது நபருக்கு ஊரில் இருந்து யாரும் வரமுடியவில்லை. எனவே நான் தான் காரியங்களை செய்தேன். எங்களை சொந்த ஊருக்கு அழைத்து செல்ல தமிழக, மராட்டிய அரசு உதவி செய்ய வேண்டும்.

Comments