ஊரடங்கு தளர்வுகள்; ஏப்ரல் 20ந்தேதிக்கு பின்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமுடன் பரவி வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், தேவையின்றி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு நேற்றுடன் முடிவுக்கு வந்தது. எனினும், வைரஸ் பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று காலை உரையாற்றினார். அவர் பேசும்பொழுது, மே 3ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. தொடர்ந்து, ஏப்ரல் 20 வரை கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும். பின்னர் தளர்வுகள் இருக்கும். ஏப்ரல் 20க்கு பிறகு அதிகம் பாதிப்பு ஏற்படாத பகுதிகளில் விதி விலக்குகள் அறிவிக்கப்படும் என கூறினார்.
இதன்படி, ஊரடங்கு நீட்டிப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியானது. இதில், ஏப்ரல் 20ந்தேதி முதல் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.
விளைபொருட்கள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. பண்ணை தொழில், மரவேலை செய்பவர், பிளம்பர், எலெக்ட்ரீசியன், மெக்கானிக்குகள் ஆகியோருக்கு அனுமதியளிக்கப்படுகிறது. கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை. அரசு நடவடிக்கைகளுக்கான கால் சென்டர்கள் இயங்க அனுமதிக்கப்படும்.
லாரிகள், பழுது பார்க்கும் பட்டறைகள் இயங்கவும், நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் (உணவு விடுதிகள்) சமூக இடைவெளியுடன் இயங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Comments
Post a Comment