சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் 155க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்து உள்ளது. 3 பேர் பலியாகி உள்ளனர். 13 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக பிலிப்பைன்ஸ் அரசு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இதனை தொடர்ந்து கல்லூரிகள் மூடப்பட்டதால் அங்கிருந்து 185 இந்திய மாணவர்கள் திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்பட்டு உள்ளனர். இதில் மாணவிகளும் அடங்குவர்.
மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து இந்தியாவுக்கு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் வந்த விமானம் கோலாலம்பூர் வந்து சேர்ந்தபோது இந்தியா விதித்துள்ள தடை தெரியவந்தது. இதனால் அவர்கள் 200 பேரும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழக மாணவர்கள் என்று தெரிகிறது.
நடுவழியில் இறக்கி விடப்பட்ட மாணவர்கள் மீண்டும் பிலிப்பைன்ஸ் செல்ல முடியாது. காரணம் அந்த நாடும் வெளிநாட்டில் இருந்து விமானங்களில் வர தடை விதித்துள்ளது.
இதனால் அங்கு தவித்து வரும் மாணவர்கள் தாங்கள் நாடு திரும்ப இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களை சந்தித்து இந்திய தூதரகத்தில் தங்கவைத்து உள்ளனர்.
என்றபோதிலும் மாணவர்கள் தாய்நாடு திரும்ப இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்தியா அனுப்பிய ஏர் ஏசியா விமானத்தில் 185 மாணவ மாணவியர்களும், மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டு, ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு இன்று வந்து இறங்கினர்.
அனைத்து பயணிகளுக்கும் அடுத்த 28 நாட்களுக்கு தனி பிரிவில் வைத்து நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்படும்.
Comments
Post a Comment