பி.எஸ்.எல்.வி. சி-47

பி.எஸ்.எல்.வி. சி-47

நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ள பி.எஸ்.எல்.வி சி-47 ராக்கெட்டிற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.

இந்தியாவின் காா்டோசாட்-3 செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்காவின் 13 சிறிய ரக செயற்கைக்கோள்களைச் சுமந்தபடி, பி.எஸ்.எல்.வி.-சி47 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து, நாளை புதன்கிழமை காலை 9.28 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.



8 இகார்ட்டோசாட் செயற்கைகோள்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது. வரிசையில் 9-வது செயற்கைகோளாக கார்ட்டோசாட்-3 என்ற செயற்கைகோளை இஸ்ரோ உருவாக்கி உள்ளது. இது மேம்படுத்தப்பட்ட தொலை உணர்வு செயற்கைகோள் ஆகும். இந்த செயற்கைகோளுடன் அமெரிக்காவின் வணிக ரீதியிலான 13 ‘நானோ’ வகை செயற்கைகோள்களும் விண்ணில் செலுத்தப்பட உள்ளன.

இந்த கார்ட்டோசாட்-3 செயற்கைகோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த 25-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9.28 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது.



பின்னர் சில தொழில்நுட்ப காரணங்களால் தேதி மாற்றப்பட்டு வரும் 27 ஆம் தேதி (நாளை) காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்தது. இந்நிலையில் இன்று கார்ட்டோசாட் செயற்கைகோளை ஏவுவதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.

1,625 கிலோ எடை கொண்ட இந்த மூன்றாம் தலைமுறை அதிநவீன காா்டோசாட்-3 செயற்கைக்கோள் புவியிலிருந்து 509 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 97.5 கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இது 5 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என இஸ்ரோ சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49-ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments